ஆஸ்திரேலியாவில் அடுத்தாண்டு அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் இரண்டு பிரிவுகளின் கீழ் கலந்துகொள்கின்றன. இதில் கலந்துகொள்ள ஏற்கனவே பத்து அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள அணிகளைத் தேர்வு செய்வதற்காக தற்போது தகுதிச் சுற்றுப்போட்டிகள் துபாய், அபுதாபியில் நடைபெற்றுவருகிறது.
இந்தத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் மொத்தம் 14 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பங்கேற்றுள்ளன. இதிலிரண்டுப் பிரிவுகளிலும் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக உலகக்கோப்பைக்குத் தகுதி பெறும். பின்னர் இரண்டு, மூன்று, நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு பிளே-ஆஃப் போட்டிகள் நடத்தப்பட்டு தேர்வு நடைபெறும்
இதில் நேற்றையப் போட்டியில் கென்யாவை எதிர்கொண்ட பப்புவா நியூ கினியா அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் ஆறு ஆட்டங்களில் ஐந்து வெற்றியுடன் ஏ பிரிவில் முதலிடம் பிடித்த பப்புவா அணி டி20 உலகக்கோப்பைக்கு முதல் அணியாக தகுதிபெற்றது.