வருகிற டிசம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி டிசம்பர் 18ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இருப்பினும் இத்தொடருக்கான இருநாட்டு அணிகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ஃபக்கர் ஜமான், கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவால் அவதிபட்டுவருகிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனை முடிவுகளிலும் அவருக்கு தொற்று இல்லை என்றே வந்துள்ளது. இருப்பினும் ஃபக்கர் ஜமான் காய்ச்சல் காரணமாக சிகிச்சிப்பெற்று வருகிறார்.
மேலும் காய்ச்சல் காரணமாக நியூசிலாந்து அணிகெதிரான தொடரிலிருந்து ஃபக்கர் ஜமான் விலகியுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியானது. இத்தகவலை தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதிபடுத்தியுள்ளது.
இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஃபக்கர் ஜமானிற்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் சோதனை முடிவுகள், அவருக்கு தொற்று இல்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளன. இருப்பினும் அவர் காய்ச்சலால் அவதிபட்டு வருகிறார். அவரது நிலையை எங்களது மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தற்போது அவரால் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் நியூசிலாந்து அணியுடனான தொடரிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:ஏடிபி ஃபைனல்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் மெத்வதேவ்!