பத்தாண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது அந்நாட்டின் ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் கருனரத்னே, ஃபெர்னாண்டோ சிறப்பான தொடக்கத்தை தந்தனர். அதன்பின் அந்த அணி 222 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை எடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் 18 ஓவர்கள் மட்டும் வீசியிருந்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் இரண்டாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது. பின் நேற்று முந்தினம் தொடங்கிய ஆட்டத்தில் ஆறு ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஈரப்பதம், வெளிச்சமின்மை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டமும் கைவிடப்பட்டது.
பின் நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இலங்கை அணி, தனஞ்செய டி சில்வா அடித்த சதத்துடன் 308 ரன்களுக்கு டிக்ளர் செய்தது. இலங்கை அணி சார்பில் தனஞ்செய 102 ரன்களை விளாசியிருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் நசீம் ஷா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.