பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்திருக்கும் தென் ஆப்பிரிக்க அணி தற்போது மூன்று போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது. லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (பிப்.11) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு பேரதிர்ச்சியாக கேப்டன் பாபர் அசாம் ரன் ஏதுமின்றி முதல் பந்திலேயே ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய முகமது ரிஸ்வான் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டார். பின்னர் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் சர்வதேச டி20 அரங்கில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 104 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பின்னர் 170 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு மாலன் - ஹெண்ட்ரிக்ஸ் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்து அடித்தளமிட்டது. இதனால் ஆறு ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்களையும் எடுத்தது.