நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்து விளையாடியது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி 297 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை முடித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியை கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதமடித்தும், ஹென்றி நிக்கோலஸ், மிட்செல் ஆகியோர் சதமடித்தும் முன்னிலைப்படுத்தினர்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 659 ரன்களைக் குவித்து டிக்ளர் செய்தது. அதன்பின் 362 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 8 ரன்களை எடுத்துள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்திடம் தடுமாறிவரும் பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடுவதைப் பார்த்தால் பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் விளையாடுவதுபோல் இருக்கிறது என்று அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது குறித்து அக்தர் வெளியிட்ட ட்விட்டர் காணொலியில், "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கொள்கைகள் அவர்களின் தோல்விக்கு வழிவகுக்கின்றன. அவர்கள் ஒவ்வொரு முறையும் சராசரியான வீரர்களைக் கொண்டு விளையாடிவருவதால், அவர்களுக்குச் சராசரியான முடிவுகள் மட்டுமே கிடைக்கின்றன.
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் போதெல்லாம், இது அம்பலப்படுத்தப்படுகிறது. அவர்கள் பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் விளையாடுகிறார்கள், பிசிபி நிர்வாகமும் அவர்களை பள்ளி அளவிலான கிரிக்கெட் வீரர்களாகவே மாற்றியுள்ளது. இப்போது பிசிபி மீண்டும் நிர்வாகத்தை மாற்ற நினைக்கிறது, ஆனால் நீங்கள் எப்போது மாறுவீர்கள்? " என பிசிபியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க:'சைனி, நடராஜனைவிட ஷர்துல் சிறந்தவர்' - தினேஷ் லாட்