ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுவருகிறது. இதன் எட்டாவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய முதல் போட்டி இதுவாகும்.
கான்பெராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஸ்டாஃபைன் டெய்லர், விக்கெட் கீப்பர் ஷெமைன் காம்பெல் ஆகியோர் தலா 43 ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் தியானா பாய்க், நிதா தார், ஏய்மன் அன்வர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் இதைத்தொடர்ந்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃப் 39 ரன்களுடனும், நிதா தார் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர். பாகிஸ்தான் அணி இப்போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதன்மூலம், பாகிஸ்தான் அணி இந்த தொடரில் விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றியுடன் கணக்கை தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மெல்போர்னில் நடைபெறவுள்ள ஒன்பதாவது போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளும், கான்பெராவில் நடைபெறவிருக்கும் 10ஆவது போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேச அணிகளும் மோதவுள்ளன.
இதையும் படிங்க:ஹீதர் நைட்டின் அதிரடியால் முதல் வெற்றியை பதிவு செய்த இங்கிலாந்து!