உலகில் பெரும்பாலருக்கும் பிடித்த உணவான பிரியாணியை இனி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சாப்பிடக்கூடாது என அந்த அணியின் பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார். தற்போதைய நவீன கிரிக்கெட்டில் விளையாட ஃபிட்னஸ் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு அணி வீரர்களும் இதில், கவனம் செலுத்திவந்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நீண்ட நாட்களாகவே இதில் அக்கறை எடுத்துகொள்ளாமல் தங்களுக்குப் பிடித்த உணவங்களை சாப்பிட்டுவந்தனர்.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் படுதோல்விக்கு அந்த அணி வீரர்களின் மோசமான உடற்தகுதிதான் காரணம் என பல்வேறு தரப்பினர் கூறினர்.
குறிப்பாக, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது தொப்பையுடன் விளையாடியதை வைத்து நெட்டிசன்கள் அவரது ஃபிட்னஸ் குறித்து சமூக வலைதளங்களில் கலாய்த்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராகவும் தேர்வுக்குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்ட மிஸ்பா-உல்-ஹக் ஃபிட்னஸில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதன்படி, உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் உணவுமுறையை அவர் முற்றிலும் மாற்றியுள்ளார்.
அந்தவகையில், பிரியாணி, எண்ணெய் வகை உணவுகள், இனிப்புகள் ஆகியவற்றுக்கு பதிலாக இனி பார்பிகியூ (சுட்டு சாப்பிடும் உணவுகள்) உணவுகள், பழங்கள்தான் அவர்களது உணவு முறையில் இடம்பெற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதே உணவுமுறை உள்ளூர் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமில்லாமல், தேசிய அணியில் விளையாடும் வீரர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என கூறப்படுகிறது.
"ஒவ்வொரு வீரர்களும் இந்த உணவுமுறையை சரியாக கடைப்பிடிக்கிறார்களா என்பதற்காக லாக்-புக் ஒன்று பராமரிக்கப்படவுள்ளது" என மிஸ்பா தெரிவித்துள்ளார். இந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் உடலில் இடம்பெற்றிருக்கும் கொழுப்பைக் குறைத்து அவர்களை உடற்தகுதியில் வலுப்பெற மிஸ்பா-உல்-ஹக் இந்த புதிய முயற்சியை எடுத்துள்ளார் என்பது தெரிகிறது. பாகிஸ்தான் அணிக்காக அவர் தனது 42 வயதுவரை கிரிக்கெட் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.