பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி மூன்று டி20, ஒரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதலில் நடைபெறவுள்ள டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இதில், பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற ஃபகர் சமான், ஹாரிஸ் சோஹைல், இமாம்-உல்-ஹக், அசிஃப் அலி, முகமது ஆமிர், வஹாப் ரியாஸ், முகமது இர்பான் உள்ளிட்ட ஏழு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது.
அதேசமயம், பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களான சோயப் மாலிக், முகமது ஹபிஸ் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணியில் புதுமுக பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் அணியில் சேர்க்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியமளிக்கிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிவரும் அவர், இதுவரை நான்கு போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் பெற்றார். இதனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.