பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று (பிப்.13) நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதையடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 51 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரிட்டோரியஸ் 17 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரரின் சிறப்பான பந்துவீச்சு இதுவாகும்.
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு ஹெண்ட்ரிக்ஸ், வான் பில்ஜொன் ஆகியோர் அதிரடியா ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதனால் 16.2 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி வெற்றி இலக்கை எட்டி, முதல் டி20 போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடியை கொடுத்தது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பிரிட்டோரியஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமனிலையில் முடிந்துள்ளது. இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (பிப்.14) லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:2ஆவது டெஸ்ட்: ரோஹித், ரஹானே அசத்தல்; இந்திய அணி முன்னிலை!