இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடரைப் போன்று, தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்படும் டி20 தொடரான ஸான்ஸி சூப்பர் லீக் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் டூ பிளெசிஸ் தலைமையிலான பார்ல் ராக்ஸ் அணி, டி காக் தலைமையிலான கேப்-டவுன் பிளிட்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் டாஸ் வென்ற பார்ல் ராக்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் டேவிட்ஸ், டெல்போர்ட் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இதில் டெல்போர்ட் 19 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து டேவிட்ஸும் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பந்தை பவுண்டரிக்கு விளாசிய டூ பிளெசிஸ் அதன் பின் ராக்ஸ் அணியின் கேப்டன் டூ பிளெசிஸ் அதிரடியாக விளையாடி 38 ரன்களைச் சேர்த்தார். இதன் மூலம் பார்ல் ராக்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. கேப் - டவுன் அணி சார்பில் அன்ரிச் நார்ட்ஜே, ஜார்ஜ் லிண்டே தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய கேப்-டவுன் அணியின் கேப்டன் டி காக்(14), மாலன்(12), மோயின் அலி(13) சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.
இதனால் அந்த அணியில் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களைக் கூட அடிக்க இயலாமல் சொற்பத்தில் பெவிலியன் திரும்பினர். இதன் மூலம் அந்த அணி 15.4 ஓவர்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 84 ரன்களை மட்டுமே எடுத்தது. ராக்ஸ் அணி தரப்பில் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், வில்ஜோன், ஃபோர்டுயின் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் பார்ல் ராக்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் கேப்-டவுன் பிளிட்ஸ் அணியை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. மேலும் பார்ல் ராக்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசி அணியை வெற்றி பெற செய்த, வில்ஜோன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் டையில் முடிந்த இங்கிலாந்து - நியூசிலாந்து இறுதிப்போட்டி; மீண்டும் ஒரு சூப்பர் ஓவர்... உலகக்கோப்பை தேஜாவூ!