சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி மூலம்தான் இந்திய அணி முதல்முறையாக பிங்க் பால் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஈடன் கார்டன் மைதானமே பிங்க் நிறத்தால் ஜொலிக்க, இந்த பிங்க் பால் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. இனி பிங்க் பால் டெஸ்ட் போட்டி அதிகம் நடைபெறும் என பிசிசிஐயின் தலைவரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான கங்குலி தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான பிங்க் பால் டெஸ்ட் போட்டி நடைபெறுவதற்கு முன்பு இதுவரை 11 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இருந்தாலும், முதல் போட்டி எப்போதும் ஸ்பெஷலானது. அந்தவகையில், டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் பிங்க் பால் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தொடங்கப்பட்டது.
டி20 போட்டிகளின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்கான ரசிகர்களின் ஆதரவு குறையத் தொடங்கியது. இதனால், டெஸ்ட் போட்டியை மேம்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு மாற்றம் தேவைப்பட்டதால், 2012இல் டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக வைக்க ஐசிசி க்ரீன் சிக்னல் தந்தது.
பகலிரவு போட்டி என்பதால், லைட் வெளிச்சத்தில் சிவப்பு நிறப் பந்துகளுக்கு பதில் பிங்க் நிறப் பந்துகள்தான் வீரர்களின் பார்வைக்கு தெரியும். இதனால், பகலிரவு போட்டியில் ஐசிசி பிங்க் நிற பந்துகளை பயன்படுத்தத் தொடங்கியது. ஐசிசி 2012இல் இதற்கு சம்மதம் தெரிவித்தாலும், மூன்றாண்டுகளுக்குப் பின்னரே முதல் பிங்க் பால் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.
2015 நவம்பர் 27ஆம் தேதி ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அடிலெயிட்டில் நடைபெற்ற போட்டிதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் பகலிரவு போட்டி. காலை, மதியமும் பார்க்கும் டெஸ்ட் போட்டி இரவில் எப்படி இருக்கும். அதுவும் லைட் வெளிச்சத்தில் பிங்க் நிறப் பந்துகளில் வீரர்கள் எப்படி விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது.
சொந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில், பிங்க் பால் டெஸ்ட்டில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. ஐசிசியின் இந்த முயற்சி ஹிட்டாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்குப் பிறகு மற்ற அணிகளும் இந்த பிங்க் பால் டெஸ்டில் விளையாடத் தொடங்கினர். இதனால், டெஸ்ட் போட்டிக்கான வரவேற்பும் ரசிகர்கள் மத்தியில் கூடியது.
இதுவரை 12 பிங்க் பால் போட்டிகள் நடைபெற்றதில், ஆஸ்திரேலிய அணி அதிகமுறையாக ஐந்து போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றிபெற்று பிங்க் பால் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடக்கியுள்ளது.
இதுவரை 12 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன் வெற்றியாளர்கள் குறித்த விவரம் இதோ...
- ஆஸ்திரேலியா v நியூசிலாந்து - ஆஸி. மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, அடிலெயிட் நவம்பர் 27- டிசம்பர் 1, 2015
- பாகிஸ்தான் v வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, துபாய், அக்டோபர் 13-17, 2016
- ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா - ஆஸி. ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, அடிலெயிட், நவம்பர் 24-28 2016
- ஆஸ்திரேலியா v பாகிஸ்தான் - ஆஸி. 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, பிரிஸ்பேன் , டிசம்பர் 15-19, 2016
- இங்கிலாந்து v வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, பிர்மிங்ஹாம், ஆகஸ்ட் 17-21, 2017
- பாகிஸ்தான் v இலங்கை - இலங்கை 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, துபாய், அக்டோபர் 6-10, 2017
- ஆஸ்திரேலியா v இங்கிலாந்து - ஆஸி. 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, அடிலெயிட், டிசம்பர் 2-6, 2017
- தென் ஆப்பிரிக்கா v ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, போர்ட் எலிசபர்த், டிசம்பர் 26-29, 2017
- நியூசிலாந்து v இங்கிலாந்து - நியூசிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, ஆக்லாந்து, மார்ச் 22-26, 2018
- வெஸ்ட் இண்டீஸ் v இலங்கை - இலங்கை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி, பிரிட்ஜ்டவுன், ஜூன்
- ஆஸ்திரேலியா v இலங்கை - ஆஸி. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, பிரிஸ்பேன், ஜனவரி 24-28, 2019
- இந்தியா v வங்கதேசம் - இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி, கொல்கத்தா, நவம்பர் 22 - 26, 2019
இதையும் படிங்க: முதல் இன்னிங்ஸில் டக்; 2-வது இன்னிங்ஸில் சதம்... டிராவிட்டின் 'பிங்க் நால்டால்ஜிக்' மொமண்ட்!