தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மோசமான ஃபார்ம் பயன்படுத்தி மற்ற அணிகள் ஃபார்முக்கு வருகின்றனர். ஆனால், 1970, 80, 90களில் இது தலைகீழாகதான் இருந்தது. நான் ஒரு ஆள அடிச்சு டான் ஆகால டா, நான் அடிச்ச 10 பேரும் டான் தான்டா... என்கிற வசனத்தைப் போல், வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்த அணிகள் எல்லாமே ஜாம்பவான்களின் அணிகள்தான்.
மேற்கூறியதைப் போல 1970, 80களில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பார்த்தாலே மற்ற அணிகளுக்கு பயம் வரும். அதற்கு முக்கிய காரணம் பேட்டிங்கில் விவியன் ரிச்சர்ட்ஸ், கார்டன் க்ரினிட்ஜ், பவுலிங்கில் ஜோயல் கார்னர் ஜெஃப் டூஜான், மால்கம் மார்ஷல் ஆகியோர் இருந்ததால்தான். அதன்பின், 1980இன் பிற்பாதியிலும், 1990களிலும் ஒரு பந்துவீச்சாளரை எதிர்கொள்வதற்கே மற்ற அணிகள் பயப்படுவார்கள் எனில் அவர் கர்ட்லி அம்ப்ரோஸ்.
6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட அவர், கிரிக்கெட்டின் தலைசிறந்த பந்துவீச்சாளராக வலம் வர காரணமே அவரது தாயார்தான். இளம் வயதில் கூடைப்பந்து வீரராக ஆக வேண்டும் என்பதுதான் கர்ட்லி அம்ப்ரோஸின் கனவு. இவரது குடும்பமும் கிரிக்கெட் பின்னணியை சார்ந்தது இல்லை என்றாலும், இவரது தாயார் கிரிக்கெட்டின் வெறிகொண்ட ரசிகை. அவரது தாக்கத்தால்தான் கர்ட்லி அம்ப்ரோஸ் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.
இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் எண்ட்ரி தந்த சமயத்தில், ஜோயல் கார்னர் ஓய்வு பெற்றார். மற்றொரு பந்துவீச்சாளரான மால்கம் மார்ஷல் ஓய்வின் தொய்வில் இருந்தார். இதனால், இவ்விரு வீரர்களின் வெற்றிடத்தை கர்ட்லி அம்ப்ரோஸ் நிரப்ப வேண்டிய அவசியம் இருந்தது. அதேசமயத்தில், கோர்ட்னி வால்ஷ் அப்போது வளர்ந்துவரும் பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார்.
குறுகிய காலத்திலேயே கர்ட்லி அம்ப்ரோஸ் கிரிக்கெட்டின் மிக சிறந்த பந்துவீச்சாளராக வலம் வர காரணமாக அமைந்தது இவரது உயரம்தான். இவரது உயரம்தான் இவருக்கு ப்ளஸ். ஆக்ரோஷத்துடன் சாதாரணமாக ஓடிவரும் இவரது பவுலிங்கை எதிர்கொள்ள 90ஸ் பேட்ஸ்மேன்களுக்கு ஃப்ரெண்ட் ஃபூட்டில் ஆட வேண்டுமா அல்லது பேக் ஃபூட்டில் ஆட வேண்டுமா என்பதில் கதி கலங்கும்.
அம்ப்ரோஸின் பந்துவீச்சில் போல்டான வீரர் எப்படி ஆடினாலும் பெரும்பாலான நேரத்தில் அவர்கள் அவுட்தான் ஆவார்கள். ஏனெனில், பேட்ஸ்மேன்களுக்கு ஆசை காட்டி ஃபரெண்ட் ஃபூட்டில் ஆட வைத்து விக்கெட்டையும் எடுப்பார். அதேசமயம், தனது பவுன்சர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை பயமுருத்தி விக்கெட்டையும் வீழ்த்துவார். இதில், பலமுறை பேட்ஸ்மேன்களுக்கு சர்ப்ரைஸ் தரும்விதமாக யார்க்கர் பந்துகளையும் இவர் பந்துவர போக்கில் வீசுவார். அதேபோலதான் ஸ்லெட்ஜிங்கும்.
ஸ்டீவ் வாஹ்விடம் ஸ்லெட்ஜிங் செய்த அம்ப்ரோஸ் தற்போது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ஸ்லோயர் பந்துகளை அறிமுகப்படுத்தியதே அம்ப்ரோஸ்தான். அவரால், ஒரு சமயத்தில் பவுன்சர் பந்துகளை வீசி விக்கெட் எடுக்கவும் தெரியும், ஸ்லோயர் பந்துகளையும் வீச முடியும். இவரும் கோர்ட்னி வால்ஷ் இருவரும்தான் ஓப்பனிங் பவுலர்ஸ். இந்திய அணியில் எப்படி சேவாக் - சச்சின் காம்போவோ அதுபோல வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இவர்கள்.
கர்ட்லி அம்ப்ரோஸின் பவுலிங் ஸ்பெல் குறித்து சொல்ல இந்தக் கட்டுரை போதாது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிலும் அம்ப்ரோஸின் கொடி பலமுறை பறந்திருக்கிறது. லேட் 90ஸ் களில் டானாக உருவமெடுத்த ஆஸி.யை ஓரே ஆளாக டீல் செய்தவர் அம்ப்ரோஸ். 1992-93இல் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்கு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. இதில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்திருந்தன.
இதனால், தொடரின் வெற்றியாரை தீர்மானிக்கும் கடைசி போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இதில், அம்ப்ரோஸின் பவுலிங்கில் மேஜிக் செய்திருப்பார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஒருகட்டத்தில் 85 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள்தான் இழந்திருந்தது. அப்போதுதான், பந்துவீச வந்தார் அம்ப்ரோஸ். அதுவரை யாரும் பார்த்திடா ஒரு பவுலிங் அட்டாக்கை பார்க்கச் செய்தார் அம்ப்ரோஸ். 32 பந்துகளில் ஒரு ரன்னை மட்டுமே வழங்கி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால், ஆஸியின் ஸ்கோர் 85க்கு இரண்டு விக்கெட்டிலிருந்து 104க்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதில், சிறந்த இடது கை பேட்ஸ்மேனான அலேன் பார்டர் டக் அவுட் ஆனார். இவரது பந்துவீச்சில் மார்க் வாஹ், டேமியன் மார்ட்டின், இயன் ஹிலி, மெர்வ் ஹியூஸ் என பலரும் வரிசை கட்டி பெவிலியனுக்கு திரும்பினார்கள். இவரது அற்புதமான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்று தொடரை வென்றது. இதுபோல, இவரது பவுலிங் குறித்து சொல்லிகொண்டே போகலாம். விவியன் ரிச்சர்ட்ஸால் அரியப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 1990முன் முன் பாதியில் கர்ட்லி அம்ப்ரோஸால் அறியப்பட்டது. இவரும், இவரது பார்ட்டனருமான வால்ஷ் இருவரும் 2000ஆம் ஆண்டில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல் ஆகியோரது ரீப்ளேஸ்மென்ட்டாக வால்ஷ், அம்ப்ரோஸ் இருந்தனர். ஆனால், வால்ஷ், அம்ப்ரோஸின் ரிப்ளேஸ்மென்ட்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இன்றளவும் கிடைக்கவில்லை. இதனால்தான் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கில் மோசமாக சொதப்பி வருகிறது. பவுலிங்கில் பல்வேறு வெரைட்டிகள்மூலம் பேட்ஸ்மேன்களை கதி கலங்கச் செய்த அம்ப்ரோஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!