தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் கடைப்பிடிக்கும் சில விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. இதனால்தான் என்னவோ ஒருநாள் போட்டிகளில் முன்பு இருக்கும் சுவாரஸ்யம் இப்போது குறைந்துக்கொண்டேப் போகிறது. ஆனால், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி என்றால் இதற்கு விதிவிளக்கு இல்லை என்பதை இவ்விரு அணிகள் மீண்டும் ஒருமுறை சொல்லாமல் சொல்லியிருக்கிறது.
கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து (ஆஷஸ்) போன்ற அணிகள் மோதும் வரிசையில் தற்போது இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட இவர்கள் மோதும் போட்டி இ.சி.ஜி மிஷினில் வரும் கோடுகளைப் போல, ஆட்டத்தில் எதிர்பார்ப்பு, பதற்றம், சுவாரஸ்யம், இவையெல்லாம் ஏறியும் இறங்கியும்செல்லும். இது போட்டியின் முடிவுவரை தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டன. அதேபோல, இவ்விரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற டி20 தொடரின் கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலைத்தான் மீண்டும் உருவானது. அந்தப் போட்டியைப் (உலகக்கோப்பை ஃபைனல்) போலத்தான் இருந்தது இந்தப் போட்டியின் முடிவும். மீண்டும் ஒரு டை, மீண்டும் ஒரு சூப்பர் ஓவர்...
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில், முதலில் நடைபெற்ற முதல் நான்கு போட்டிகளில் இவ்விரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றிருந்தது. இதனால், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.
இப்போட்டி தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில், கோலின் முன்ரோ, டிம் சைஃபெர்ட் ஆகியோர் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்கவிட்டனர். இறுதியில் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 11 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கப்தில் 50, கோலின் முன்ரோ 46 ரன்கள் விளாசினர்.