2003 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொடர் என்றால் அது 2011தான். அதற்கு முக்கிய காரணம் 2003இல் நூலளவில் கலைந்த கனவு 2011இல் நனவானது. 2011உலகக்கோப்பை தொடர் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது.சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன் (மார்ச் 24) இதே நாளில், இந்த தொடரின் காலிறுதி போட்டியில் இந்தியா, அப்போதைய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
2003 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் மோதிய இவ்விரு அணிகள் இம்முறை காலிறுதி சுற்றில் பலப்பரீட்சை நடத்தியது. இதனால், பெரும்பாலானா 90'ஸ் கிட்ஸ், இந்தப் போட்டியைக் காலிறுதிப் போட்டியாக பார்க்காமல், 2003 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டியாகவே பார்த்தனர்.
தற்போது உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீராவில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதுவரை ஃபார்மில் இல்லாத ஆஸி. கேப்டன் ரிக்கி பாண்டிங் இப்போட்டியில் சதம் விளாசி ஃபார்முக்கு திரும்பினார். இதனால் மீண்டும் இந்திய ரசிகர்களுக்கு 2003 உலகக்கோப்பையின் நினைவலைகள் மனதிற்குள் ஓடியது.
ஆனால், பாண்டிங்கைத் தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் ஜாகிர் கான், யுவராஜ் சிங், அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சுக்கு எதிர்கொள்ள முடியாமல் திணறியதால், ஆஸ்திரேலிய அணி 260 ரன்களை குவித்தது. இது 2003 உலகக்கோப்பையைவிட ஆஸ்திரேலிய அணி 99 ரன்கள் குறைவாகவே எடுத்தது. அதேசமயம், வாட்சன் விக்கெட்டை வீழ்த்துவதற்காகவே, தோனி அஷ்வினை இப்போட்டியில் களமிறக்கினார். அதன் பலன், விரைவில் கிட்டியது. பவர்-பிளே ஓவரில் வாட்சனை அஷ்வின் போல்ட் ஆக்கினார்.
இதையடுத்து, இந்திய அணியில் சேவாக், டெண்டுல்கர் வழக்கம்போல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அந்தத் தொடரில் அதுவரை எதிர்கொண்ட முதல் பந்துகளை பவுண்டரிகளாக பறக்க விட்ட சேவாக், இந்தப் போட்டியில் பிரட் லீயின் பந்தை டிஃபென்ஸ் ஷாட் ஆடினார். ஆனால், மறுமுனையில் இருந்த சச்சின் தனது முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். சேவாக்கை விடவும், சச்சின் அன்றைய நாளில் கான்ஃபிடென்ட்டாக ஆடினார்.