டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை மட்டுமே பார்த்துவந்த ரசிகர்களை, கிரிக்கெட்டின் மறு உலகத்திற்கு அழைத்துச் சென்றதுதான் டி20 எனப்படும் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர். டி20 போட்டிகள் வருவதற்கு முன்பாக 50 ஓவர் அல்லது டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் பொறுமைத் தன்மையை ரசித்துவந்த ரசிகர்களுக்கு, வீரர்களின் இன்னொரு முகத்தைக் காட்டசெய்த பெருமை டி20 கிரிக்கெட் போட்டியையே சாரும்.
அந்த வகையில் 2007ஆம் ஆண்டுமுதல் தொடங்கப்பட்ட டி20 உலகக்கோப்பைத் தொடர் இன்றளவும் ரசிகர்களின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவாகவே கருதப்பட்டுவருகிறது. இத்தொடரின் முதல் அத்தியாயத்திலேயே கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு, 2016ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நாள்.
டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை என இந்திய அணிக்கு இரு மகுடங்களைச் சூட்டிய தோனியின் தலைமையில், 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி களம் கண்டது. லீக் சுற்றுகளில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி, அத்தொடரின் அரையிறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்று கோப்பையை வெல்லும் கனவில் மிதந்தது.
ஆனால் அரையிறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கொடுக்கவிருந்த ஷாக் பற்றி யாரும் நினைத்திருக்க மாட்டோம். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.
பின் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா-ரஹானே இணை சிறப்பான தொடக்கத்தை தந்தது. இதில் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட் கோலி பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை மிரளவைத்தார்.
இதன்மூலம் அவர் அரைசதத்தையும் கடந்தார். இதனால் 17 ஓவர்களில் இந்திய அணி 150 ரன்களை எட்டியது. அதன்பிறகுதான் விராட்டின் மறுமுகம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்குத் தெரியவந்தது. ரஸ்ஸல், பிராவோ வீசிய டெத் ஓவர்களுக்கு பவுண்டரிகளால் பதிலளித்தார்.
இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்களைக் குவித்தது. இந்திய அணி சார்பில் விராட் கோலி 47 பந்துகளில் 89 ரன்களை எடுத்திருந்தார்.