இந்திய கிரிக்கெட்டின் ஆளுமையாக விளங்கியவர் கபில்தேவ். அணியில் ஒரு ஆல்ரவுண்டர், கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் அவர். அவர் இல்லையென்றால் இந்திய அணிக்கு 1983இல் உலகக் கோப்பை கிடைத்திருக்காது என்பதே நிதர்சனம். தனது ஆரம்பக் காலக்கட்டத்தில் எந்த அளவிற்கு ஆற்றலுடன் இந்திய அணிக்காக விளையாட தொடங்கினாரோ அதே அளவிலான ஆற்றலுடன்தான் இறுதிவரை விளையாடினார்.
1978ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டுவரை இந்த 16 ஆண்டுகளில் கபில்தேவ் படைத்த சாதனைகள் ஏராளம். அந்த வகையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையை கபில்தேவ் முறியடித்து இன்றோடு 26 ஆண்டுகள் கடந்துவிட்டன.
1973ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடிய ஹாட்லி 1990இல் ஓய்வுபெறும்போது 86 போட்டிகளில் 431 விக்கெட்டுகளை கைப்பற்றி, டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்தார். அந்த சாதனையை கபில்தேவ் பிப்ரவரி 8, 1994இல் இலங்கை அணிக்கு எதிராக முறியடித்தார். அகமதாபாத்தில் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் ஹசன் திலக்கரத்னாவின் விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை எட்டினார்.