ட்விட்டர், ஃபேஸ்புக்கில் கபில் தேவ் குறித்து ஏதேனும் போஸ்ட் பார்த்தால் நம் மனதுக்குள் ஏராளமான மெமரீஸ் ஓடும். கபில்தேவ் கபில்தேவ்தான்யா... அவரை மாதிரி எல்லாம் வர சான்ஸே இல்லை. என்ன தைரியம், என்ன நம்பிக்கை போன்ற சொற்கள் நமக்குள் தோன்றி, லார்ட்ஸில் 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது, ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை கேட்ச் பிடித்தது போன்று இந்திய அணிக்காக அவர் நிகழ்த்திய பல மாயாஜாலங்கள் நமக்கு தெரியாமலேயே நம் கண் முன் வந்துசெல்லும்.
அப்படி மறக்க முடியாத அளவுக்கு பல நாஸ்டால்ஜியா மொமண்ட்ஸ்களை உருவாக்கிய கபில், 29 வருடங்களுக்கு முன் மீண்டும் அதே லார்ட்ஸில் மற்றொரு ஸ்வீட் மெமரியை வேறு விதத்தில் ரசிகர்களுக்கு தந்துள்ளார். 1990ல், தொடர்ந்து நான்கு பந்துகளில் நான்கு சிக்சர்கள் அடித்து தற்போதைய நவீன் கிரிக்கெட் ஃபார்மெட்டை ஆரம்பித்துவைத்தவர் கபில்தேவ்.
1990களில் கிரிக்கெட் என்ற போட்டி இந்தியாவில் தெருக்கள் எங்கும் ஊடுருவ தொடங்கிய காலம் அது. சச்சின் என்ற ஜாம்பவான் இந்திய அணியில் இளம் வீரராக இடம்பிடித்த காலமும் அதுதான். 1990இல் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இங்கிலாந்துக்கு பயணப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் கிரஹாம் கூச்சிற்கும் இந்த போட்டி மறக்கமுடியாதது. இப்போட்டியில் அவர் தனி மனிதனாக 333 ரன்கள் விளாச, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 653 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் இழந்து டிக்ளேர் செய்தது. கிட்டத்தட்ட 162 ஓவர்கள் (இரண்டு நாட்கள்) முழுவதும் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடியது. 655 ரன்கள், அதுவும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த ஸ்கோரை ஓவர் டேக் செய்வது மிகவும் கடினம் என்றாலும் இந்திய அணி மரியாதையான ஸ்கோர் அடிக்குமா என்பதுதான் ரசிகர்களின் அப்போதைய எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்திய அணியில் ரவி சாஸ்திரி சதம் அடித்தாலும், மற்ற வீரர்கள் இரட்டை இலக்கு ரன்களில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 348 ரன் எடுத்திருந்தது. அந்த சமயத்தில் எட்டாவது வீரராக களமிறங்கினார் கபில்.
முகமது அசாருதீனுடன் இவர் ஜோடி சேர்ந்து வழக்கம்போல் அதிரடியாக ஆடத் தொடங்கினார். கபில் தேவின் உதவியால் அசாருதின் சதம் விளாசினார். ஆனால் 121 ரன்களில் அவரும் அவுட் என்பதால் இந்திய அணி 393 ரன்களுக்கு ஏழு விக்கெட் என்ற நிலையில் இருந்தது.
ஃபாலோ ஆனைத் தவிர்க்க வேண்டுமென்றால் இந்திய அணி 61 ரன்கள் எடுக்க வேண்டும். ஆனால், மூன்று விக்கெட்டுகள்தான் கைவசம் உள்ளன. எனவே ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை கபில்தேவ் மட்டும்தான். பொதுவாக, நாம் எப்போதெல்லாம் இந்திய அணி மீது நம்பிக்கையை இழக்கிறோமோ அப்போது, களத்தில் யார் இருந்தாலும் சிறப்பாக ஆடி நம்பிக்கை வரவைப்பார்கள். அசாருதினைத் தொடர்ந்து, வந்த கிரண் மோரேவை, நான் ஸ்ட்ரைக்கில் வைத்து கபில்தேவ் ஸ்ட்ரைக்கில் அதிரடியாக ஆடினார். இதனால், இந்திய அணி இப்போட்டியில் ஃபாலோ ஆன் பெறாது என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு தோன்றியது.
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை ரசிகர்களுக்கு திடீரென அபாரமான நம்பிக்கையை கொடுக்கும். ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்போது ஏதாவதொரு விக்கெட்டை இழந்து மீண்டும் பிரஷரை ஏற்றும். அந்தவகையில், கபில்தேவ் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க அவருக்கு கம்பெனி கொடுத்துக்கொண்டிருந்த கிரண் மோரே தனது விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த, சஞ்சீவ் ஷர்மாவும் விக்கெட்டை இழக்க இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்களை எடுத்திருந்தது. இதனால் நம்பிக்கை கொண்டிருந்த ரசிகர்கள் மீண்டும் பிரஷருக்குள் சென்றனர்.
இப்போது, இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்க்க 24 ரன்கள் எடுக்க வேண்டும். 24 ரன்கள்தானே, அதான் கபில் இருக்கிறாரே என்று நினைத்தாலும், கையில் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளது அதுவும் கடைசி ஆளாக களமிறங்கியவர் நரேந்திர ஹிர்வானி.