இந்திய கிரிக்கெட் அணியில் மிகச்சிறந்த வீரர்களாக வலம் வந்தவர்களும் முன்னாள் கேப்டன்களுமான சவுரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட். இதில் ஒருவர் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ‘தாதா’வாக வலம்வந்தாலும், மற்றோருவரோ தடுப்பாட்டத்தில் பந்துவீச்சளர்களை புரட்டியெடுக்கும் ‘தடுப்பு சுவராக’ வலம்வந்தவர்.
ஆனால், இருவரும் இணைந்து விளையாடிய ஒரு போட்டி சரித்திரத்தை புரட்டி போட்டது என்றால் அது மிகையாகாது. அப்படியொரு போட்டியின் காரணமாக தான் இந்த இருபெரும் சரித்திர வீரர்கள் இந்திய கிரிக்கெட்டை வேறோரு பரிணாமத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த போட்டியானது 1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அரங்கேறியதும் மற்றோரு சாதனையாகும். அத்தொடரின் 21ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.
அப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி இரட்டை சிகரங்களின் அசுர ஆட்டத்தை எதிர்பார்திராமல் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சடகோபன் ரமேஷ், சவுரவ் கங்குலி இணை தொடக்கத்தில் நிதான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அதில் ரமேஷ் ஐந்து ரன்களை எடுத்திருந்த போது, சமிந்தா வாஸிடன் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த ராகுல் டிராவிட் - கங்குலி இணை இலங்கை அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பறக்க விட்டனர். ஒரு கட்டத்தில் இந்த ஜோடிக்கு எப்படி பந்துவீசுவது என்று தெரியாமல், ‘இவனுங்க எப்படி போட்டாலும் அடிக்குறானுங்க’ என்ற வசனத்திற்கேற்ப பந்துவீச்சாளர்களை தெறிக்கவிட்டனர். தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த கங்குலி தனது ஏழாவது ஒருநாள் சதத்தையும், டிராவிட் தனது ஐந்தாவது ஒருநாள் சாதத்தையும் பதிவு செய்து அசத்தினர்.
இதனால் ஐம்பது ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை குவித்திருந்தது. இதில் சவுரவ் கங்குலி 158 பந்துகளில் ஏழு சிக்சர்களையும், 17 பவுண்டரிகளையும் பறக்க வீட்டு 183 ரன்களை விளாசித்தள்ளினார். மறுமுனையில் ராகுல் டிராவிட்டும் தனது பங்கிற்கு 129 பந்துகளில் 145 ரன்களை வெளுத்து தள்ளினார்.