கிரிக்கெட் ரசிகர்களிடம் ஒருநாள் போட்டியில் முதலில் யார் இரட்டை சதம் அடித்தார்கள் என்ற கேள்வியைக் கேட்டால் பெரும்பாலான ரசிகர்கள் சச்சின் என்றுதான் கண்ணை மூடிக்கொண்டு பதிலை தெரிவிப்பார்கள். இவ்வளவு ஏன், ஒருமுறை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் crorepati (கோடீஸ்வரன்) நிகழ்ச்சியில் சில ஆண்டுகளுக்கு முன் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது.
பலரும் சச்சின் என்றுதான் நினைத்தனர். ஆனால், அதுதான் தவறான பதிலாக இருந்தது. பொதுவாக எந்த ஒரு சாதனையும் முதலில் யார் படைக்கிறார்களோ அவர்களது பெயர்தான் நம் நினைவில் இருக்கும் என்பது இதற்கு காரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சச்சினுக்கு முன்னதாகவே இச்சாதனையை முதலில் எட்டியது ஆஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்தான்.
1997இல் இந்தியாவில் நடைபெற்ற மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணியை நான்காவது முறையாக வென்றது. இதில், டென்மார்க் அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 412 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய பெலின்டா கிளார்க், தனது அசாத்தியமான பேட்டிங்கால் 22 பவுண்டரிகள் என 155 பந்துகளில் 229 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.