கரோனா வைரஸ் (தீநுண்மி) பெருந்தொற்றால் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் முடங்கியுள்ளன. குறிப்பாக, ஐபிஎல் டி20 தொடர், ஆஸ்திரேலியா - வங்கதேசம் தொடர் உள்ளிட்ட பல கிரிக்கெட் தொடர்கள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, இப்பெருந்தொற்றால் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் திட்டமிடப்பட்டிருந்த டி20 உலகக்கோப்பை நடைபெறுமா என்பதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. தொடர் ஏதும் நடைபெறாததால் பல்வேறு கிரிக்கெட் வாரியங்களும் பெருமளவில் இழப்பைச் சந்தித்துவருகின்றன.
குறிப்பாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.