நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் 192 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இந்த இன்னிங்ஸில் நியூசிலாந்து தொடக்க வீரர்கள் லேதம் - டாம் பிளெண்டல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.
பின்னர் 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பிளெண்டல் ஆட்டமிழந்து வெளியேற, அவரை தொடர்ந்து 53 ரன்களில் லேதமும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த நட்சத்திர வீரர்கள் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், நிக்கோலஸ் என அனைவரும் வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்தனர்.
இதனால் 45.3 ஓவர்களில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளர் செய்து. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு இலக்காக 373 ரன்களையும் நியமித்தது.
இதையடுத்து, இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அபித் அலி, ஷான் மசூத் ஆகியோர் ரன் ஏதுமின்றி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தனர். அவரை தொடர்ந்து வந்த ஹேரிஸ் சொஹைலும் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அஸர் அலி - ஃபவாத் ஆலம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்களை எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணி தரப்பில் அஸர் அலி 34 ரன்களுடனும், ஃபவாத் ஆலம் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நாளை (டிசம்பர் 30) ஐந்தாம் நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி தொடரவுள்ளது.
முன்னதாக, இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் சொஹைலின் விக்கெட்டை டிம் சவுதி எடுத்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் தனது 300ஆவது விக்கெட்டை கைப்பற்றி சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: இந்திய அணி அபார வெற்றி!