நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 டிச.18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இரு அணிகளும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பயிற்சியின்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கை பெருவிரல் முறிந்துள்ளதை உறுதி செய்தனர்.
இதையடுத்து அவர் குறைந்தபட்சம் இரண்டு வாரகால ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளனர். இதனால் நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து பாபர் அசாம் விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பாபர் குணமடைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? என்பது குறித்த அறிவிப்பை பின்னர் வெளியிடுவோம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'உடற்தகுதியை மேம்படுத்துவதற்கான முயற்சியில் உள்ளோம்' - ஸ்ஜோர்ட் மரிஜ்னே