நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (டிசம்பர் 20) ஹாமில்டனில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான்
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் சஃபீக், ஹைத்ர் அலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரிஸ்வானும் 22 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் ஆறு ஓவர்களுக்குள் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்களை மட்டுமே எடுத்தது.
அதிரடியில் மிரட்டிய ஹபீஸ்
இதைத்தொடர்ந்து களமிறங்கிய அனுபவ வீரர் முகமது ஹபீஸ், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 99 ரன்களை மட்டுமே எடுத்தார்.
பேட்டிங்கில் மிரட்டிய ஹபீஸ் இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் அணி தரபில் முகமது ஹபீஸ் 99 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடக்கத்தில் தடுமாற்றம்:
அதன் பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் - செஃபெர்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு அடித்தளம் அமைத்தது. இருப்பினும் அதிரடி வீரர் மார்டின் கப்தில் 21 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
செஃபெர்ட் -வில்லியம்சன் பார்ட்னர்ஷிப்
அதன்பின் ஜோடி சேர்ந்த செஃபெர்ட் - கேன் வில்லியம்சன் இணை எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு அசத்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
செஃபெர்ட் -வில்லியம்சன் பார்ட்னர்ஷிப் இதன்மூலம் 19.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டி, ஒன்பது விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் செஃபெர்ட் 84 ரன்களையும், கேன் வில்லியம்சன் 57 ரன்களையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.
தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய டிம் சவுதி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மறுநாள் (டிச.22) நேப்பியரில் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க:டிடிசிஏவின் பயிற்சியாளராக ராஜ்குமார் சர்மா நியமனம்!