நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்தது.
இதனிடையே, டி20 தொடரில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டி20 அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்குழுவில் இடம்பிடிக்கும் சஞ்சு சாம்சனுக்கு, விளையாடும் 11 நபர்கள் அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது.
சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடந்து முடிந்த மூன்றாவது டி20 போட்டியில் அவர் ஐந்து வருடங்களுக்கு பின் டி20 போட்டிக்கான இந்திய அணியில் விளையாடினார். இதனால், இம்முறையாவது அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, ஒருநாள் தொடருக்கான இந்திய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்ற இந்திய அணிக்குழுவிலிருந்து ஒரேயொரு மாற்றம்தான் செய்யப்பட்டுள்ளது.
ஷிகர் தவானுக்கு பதிலாக இளம் வீரர் பிரித்விஷா இந்திய அணிக்குழுவில் இடம்பெற்றுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் அவர் 100 பந்துகளில் 150 ரன்களை விளாசி தேர்வுக்குழுவினரின் கவனத்தை பெற்றார்.
டி20 தொடருக்கான இந்திய அணி:விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, சிவம் தூபே, சாஹல், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, பிரித்விஷா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, சிவம் தூபே, சாஹல், ஷர்துல் தாகூர், கேதர் ஜாதவ்
இந்தியா - நியூசிலாந்து டி20 அட்டவணை
போட்டி | இடம் | நாள் |
முதல் போட்டி | ஆக்லாந்து | ஜனவரி 24 |
இரண்டாவது போட்டி | ஆக்லாந்து | ஜனவரி 26 |
மூன்றாவது போட்டி | ஹாமில்டன் | ஜனவரி 29 |
நான்காவது போட்டி | வெலிங்டன் | ஜனவரி 31 |
ஐந்தாவது போட்டி | மவுண்ட் மௌங்கனுய் | பிப்ரவரி 2 |
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடர் அட்டவணை
போட்டி | இடம் | நாள் |
முதல் ஒருநாள் போட்டி | ஹாமில்டன் | பிப்ரவரி 5 |
இரண்டாவது ஒருநாள் போட்டி | ஆக்லாந்து | பிப்ரவரி 8 |
மூன்றாவது ஒருநாள் போட்டி | மவுண்ட் மௌங்கனுய் | பிப்ரவரி 11 |
இதையும் படிங்க: 5 டக்... எக்ஸ்டராஸ்தான் டாப் ஸ்கோர்... ஜப்பானை பரிபாதபமாக்கிய இந்தியா!