தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வீணில் முடிந்த ஜடேஜாவின் போராட்டம்... தொடரை இழந்த கோலி அண்ட் கோ! - Kyle Jamieson bowling

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை இழந்துள்ளது.

new-zealand-defeated-india-by-22-runs-to-win-odi-series
new-zealand-defeated-india-by-22-runs-to-win-odi-series

By

Published : Feb 8, 2020, 3:40 PM IST

Updated : Feb 8, 2020, 4:32 PM IST

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணி இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்விடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்திய அணியைப் பொறுத்தவரையில் ஷமி, குல்தீப் ஆகியோருக்கு பதிலாக சைனி, சாஹல் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியுள்ளனர். நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சாளர்கள் இஷ் சோதி, சாண்ட்னர் ஆகியோருக்கு பதிலாக அறிமுக வீரர் கைல் ஜேமிசன், மார்க் சேப்மான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி டெய்லரின் பொறுப்பான ஆட்டத்தால் எட்டு விக்கெட் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்தது. 74 பந்துகளில் ஆறு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உட்பட 73 ரன்களில் அவர் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இந்திய அணி தரப்பில் சாஹல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

சவுதி பந்துவீச்சில் போல்டான கோலி

இதைத்தொடர்ந்து, 274 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அணியின் தொடக்க வீரர்களான மயாங்க் அகர்வால் (3), பிரித்விஷா (24 , கேப்டன் கோலி (15), கே.எல். ராகுல் (5), கேதர் ஜாதவ் (9) ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.

ஸ்ரேயாஸ் ஐயர்

இதனால், இந்திய அணி 20.5 ஓவர்களில் ஐந்து விக்கெட்டை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.ஒருபக்கம் விக்கெட்டுகள் விழ்ந்தாலும், மறுபக்கம் நான்காவது வரிசையில் களமிறங்கி பொறுப்புடன் விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில், ஏழு பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். ஸ்ரேயாஸ் ஐயரை தொடர்ந்து வந்த ஷர்துல் தாகூர் 18 ரன்களில் அவுட்டாக இந்திய அணி 153 ரன்களுக்கு ஏழு விக்கெட்டை பறிகொடுத்தது.

இதனால், இந்திய அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்ட நிலையில், எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜடேஜா - நவ்திப் சைனி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.ஜடேஜா சிங்கிளும், டபுளும் எடித்து பொறுப்பாக விளையாட, மறுமுனையில், நவ்தீப் சைனி பவுண்டரிகள் அடித்து அதகளப்படுத்தினார். இவர்களது ஆட்டத்தால் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் என நம்பிக்கை ரசிகர்களுக்கு வந்தது.

ஜடேஜா - நவ்தீப் சைனி

இந்நிலையில், இந்த ஜோடி 76 ரன்களை சேர்த்த நிலையில், நவ்தீப் சைனி ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சர் உட்பட 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 44.3 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 229 ரன்களை எடுத்தது.

நவ்தீப் சைனியை தொடர்ந்து வந்த சாஹல், ஜடேஜாவுடன் ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார். 48ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சாஹல் தேவையில்லாமல் இரண்டாவது ரன்னுக்கு ஓடிவந்த விளைவால் அவர் 10 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனால், இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 23 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால், கையில் ஒரேயோரு விக்கெட் மட்டுமே இருந்தன. செட் பேட்ஸ்மேன் ஜடேஜா அரைசதம் அடித்திருந்ததால் இப்போட்டியை அவர் வெற்றிகரமாக ஃபினிஷ் செய்து தொடரை உயர்ப்புடன் வைத்துருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி விக்கெட்டை பறிகொடுத்த சோகத்தில் ஜடேஜா

ஜிம்மி நீஷம் வீசிய ஒயிட் அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் லைனில் 49ஆவது ஓவரின் முதல் இரண்டு பந்தை தவறவிட்ட ஜடேஜா, அடுத்து மூன்றாவது பந்தையும் நீஷம் அதே லைனில் வீசினார். ஆனால், இம்முறை ஜடேஜா அடித்த பந்து, லாங் ஆஃப் திசையில் இருந்த காலின் டி கிராண்ட்ஹோம் கையில் பிடிப்பட்டதால் அவர் 55 ரன்களுக்கு அவுட்டானார்.

இதனால், இந்திய அணி 48.3 ஓவர்களில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி இப்போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்துள்ளது.

நியூசிலாந்து அணி தரப்பில் ஹமிஷ் பெனேட், டிம் சவுதி, புதுமுக பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன், காலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இப்போட்டியில் பேட்டிங்கில் இரண்டு சிக்சர் உட்பட 25 ரன்களும், பவுலிங்கில் பிரித்விஷா, நவ்தீப் சைனி ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றிய கைல் ஜேமிசன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ள கடைசி ஒருநாள் போட்டியிலாவது இந்திய அணி ஆறுதல் வெற்றிபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க:வெறித்தனம் காட்டிய ஷஃபாலி, ஸ்மிருதி மந்தனா... ஆஸி.யை வீழ்த்திய இந்தியா!

Last Updated : Feb 8, 2020, 4:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details