தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல் டெஸ்ட் - வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்ற நியூசிலாந்து - நியூசிலாந்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றி

வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் 1- 0 என்று முன்னிலை பெற்றது.

NZ vs IND, 1st Test
New Zealand crush India by 10 wickets

By

Published : Feb 24, 2020, 9:07 AM IST

நியூசிலாந்து வெலிங்டன் பேஸின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை இந்திய இன்று விளையாடியது. மூன்றாம் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி 144 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது ரகானே 25, விஹாரி 15 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 39 ரன்கள் நியூசிலாந்தை விட பின்தங்கிய நிலையில் இருந்தது.

இதைத்தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டத்தை இவர்கள் இருவரும் தொடர்ந்து ஆடினர். நிதான ஆட்டத்தை கடைபிடித்து வந்த ரகானே, 29 ரன்கள் எடுத்த நிலையில், போல்ட் வேகத்தில் விக்கெட் கீப்பர் வால்ட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து தொடக்கத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

இதன் பின்னர் அவரோடு சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய விஹாரி 15 ரன்களோடு, அடுத்த ஓவரிலேயே சவுத்தியின் வேகத்தில் கிளீன் போல்ட் ஆனார். ஆட்டம் தொடங்கிய சில நிமடங்களிலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து விளையாடி 25 ரன்கள் எடுத்தார். அவரும் சவுத்தி பந்தில் போல்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

மற்ற வீரர்களான அஸ்வின் 4, இஷாந்த் 12, பும்ரா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்தை விட 8 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றது.

இதனால் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து, 1.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி வெற்றிக்கான இலக்கை எட்டியது. இதன் மூலம் இரண்டுப் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலை பெற்றது.

முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 4 என மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் சவுத்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கோர் சுருக்கம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ் -165 (ரகானே - 46, சவுத்தி - 4/49)

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் - 348 (வில்லியம்சன் - 89, இஷாந்த் ஷர்மா - 5/68)

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் - 191 (மயங்க் அகர்வால் 58, போல்ட் - 5/61)

நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் - 9/0 (லதம் - 7 நாட் அவுட்)

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 100ஆவது வெற்றி, அணியின் மூத்த வீரர் ராஸ் டெய்லர் பங்கேற்கும் 100ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி என இந்த வெற்றி, நியூசிலாந்து அணிக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக மாறியுள்ளது.

அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டிகளில் ஒன்றாக இந்த டெஸ்ட் போட்டி அமைந்துள்ள நிலையில், இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, 8ஆவது போட்டியில் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.

நியூசிலாந்து - இந்தியாவுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, வரும் 29ஆம் தேதி கிறிஸ்ட் சர்ச்சிலுள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:

ஐஎஸ்எல்: கோல் மழையால் டிராவில் முடிந்த கேரளா-ஒடிசா ஆட்டம்!

ABOUT THE AUTHOR

...view details