இந்தியா - நியூசிலாந்து முதல் ஒருநாள் போட்டி:
நியூசிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. முன்னதாக, நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்றது.
இதனால், தொடர் தோல்விகளுக்கு நியூசிலாந்து அணி முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. காயம் காரணமாக கேன் வில்லியம்சன் விலகிய நிலையில், நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம் லாதம் விளங்கினார்.
பிரித்விஷா, மயாங்க் அகர்வால் அறிமுகம்:
இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற அவர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இப்போட்டியின்மூலம், ஒருநாள் போட்டியில் அறிமுகமாகிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான பிரித்விஷா 20 ரன்களிலும், மயாங்க் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் சதம்... இந்தியா 347 ரன்கள் குவிப்பு:
இதைத்தொடர்ந்து, நான்காவது வரிசையில் களமிறங்கி நேர்த்தியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், 103 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். மறுமுனையில், ஐந்தாவது வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 64 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், ஆறு சிக்சர்கள் உட்பட 88 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இதனால், இந்திய அணி 50 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 347 ரன்களைக் குவித்தது.
நியூசிலாந்துக்கு சிறந்த தொடக்த்தை தந்த ஹென்ரி நிக்கோலஸ்:
இதைத்தொடர்ந்து, 348 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான மார்டின் கப்தில் - ஹென்ரி நிக்கோலஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 85 ரன்களை சேர்த்தனர். இந்த நிலையில், ஷர்துல் தாகூரின் பந்துவீச்சில் கப்தில் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த டாம் பிளண்டல் ஒன்பது ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
ஜான்டி ரோட்ஸ் ஸ்டைலில் ரன் அவுட் செய்த கோலி:
இதையடுத்து, நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் - ராஸ் டெய்லர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 62 ரன்களை சேர்த்த நிலையில், கோலி ஜான்டி ரோட்ஸ் ஸ்டைலில் நிக்கோலஸை ரன் அவுட் செய்து இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். இதனால், நிக்கோலஸ் 11 பவுண்டரிகள் உட்பட 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.