நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் மார்ச் 20ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (மார்ச் 23) கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், காயம் காரணமாக முதலாவது ஒருநாள் போட்டியிலிருந்து விலகிய நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர், நாளை நடைபெறவுள்ள போட்டியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் கூறுகையில், "வங்கதேச தொடருக்கு முன் ராஸ் டெய்லர் காயமடைந்தது எங்கள் அணிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அவரது காயம் இன்னும் குணமடையாததால், கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும் இரண்டாவது போட்டியிலிருந்தும் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள மார்க் சாப்மன், டெய்லரின் இடத்தை நிரப்புவார் என்பதில் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பார்சிலோனா அணியின் சாதனை நாயகன் மெஸ்ஸி