நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரில் இதுவரை நடந்த 4 போட்டிகளில், இரண்டில் நியூசிலாந்தும், இரண்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்று தொடரை சமநிலையில் வைத்திருந்தன.
இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி வெலிங்டனில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபின்ச் - ஜோஷ் பிலிப்பே இணை களமிறங்கியது. இதில் பிலிப்பே 2 ரன்களில் ட்ரெண்ட் போல்டிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஃபின்ச்- மேத்யூ வேட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தியது. இந்நிலையில், 36 ரன்களில் ஃபின்ச் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மேத்யூ வேட் 44 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பின்னர் களமிறங்கிய வீரர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் இஷ் சோதி மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.