ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி, 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். மேலும் நியூசிலாந்து அணியில் காயத்திலிருந்து மீண்ட வேகப்பந்துவீச்சாளர் டிரண்ட் போல்ட் சேர்க்கப்பட்டிருந்தார்.
பர்ன்ஸின் விக்கெட்டை வீழ்த்திய போல்ட் அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு, அதிர்ச்சியளிக்கும் விதத்தில் போல்ட் தனது முதல் ஓவரிலேயே ஜோ பர்ன்ஸை வெளியேற்றினார். பின் வார்னருடன் ஜோடி சேர்ந்த லபுசாக்னே வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் டேவிட் வார்னர் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வாக்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த லபுசாக்னே தனது ஏழாவது சர்வதேச அரைசதத்தை கடந்து அசத்தினார். பின் 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவரும் வெளியேற அந்த அணி சற்று தடுமாறியது.
பின் அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித், மேத்வ்யூ வேட் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இதில் ஸ்மித் அரை சதமடித்து அசத்தினார். ஆனால் மறுமுனையில் மேத்வ்யூ வேட் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன் முலம் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 260 ரன்களைக் குவித்துள்ளது. அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்களுடனும், ட்ராவிஸ் ஹெட் 30 ரன்களுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளனர். நியூசிலாந்து அணி தரப்பில் கிரண்ட்ஹோம் இரண்டு விக்கெட்டுகளையும், போல்ட், வாக்னர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.
இதையும் படிங்க:குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாடிய ஆஸி. வீரர்கள்