நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணி மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு சுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனால் மயாங்க் அகர்வால் கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் அகர்வால் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, தொடர்ந்து வந்த பிலிப்ஸ் 13 ரன்களிலும், கேப்டன் டாம் ப்ரூஸ் 17 ரன்களிலும், டாம் ப்ளண்டல் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் தொடக்க வீரர் ஜார்ஜ் வொர்க்கர் நிதானமாக ரன்களை சேர்த்தார். 25 ஓவர்களில் 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ஜார்ஜ் - கோல் இணை சேர்ந்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஜார்ஜ் சதம் விளாசி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 295 ரன்கள் எடுத்தது.