#VijayHazare2019: 2019-20ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றைய ஆட்டத்தில் தமிழ்நாடு அணியை எதிர்த்து குஜராத் அணி ஆடியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ததையடுத்து, தமிழ்நாடு சார்பாக அபினவ் முகுந்த் - முரளி விஜய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
அதன்பின் அதிரடி ஆட்டத்தில் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சுக்குநூறாக்கினர். இதில் அதிரடியாக விளையாடிய முரளி விஜய் முதலில் அரைசதமடித்து அசத்த, அவரைத் தொடர்ந்த முகுந்தும் அரைசதம் அடித்து அசத்தினார்.
அதன் பின் அபினவ் முகுந்த் 79 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் விஜய்யுடன் இணைந்து அதிரடி காட்டத் துவங்கினார்.
சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட முரளி விஜய் எட்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என மொத்தம் 94 ரன்களை எடுத்து ஆறு ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதன் மூலம் தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை எடுத்தது.