#VijayHazare : இந்தியாவில் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ்நாடு அணி, ரயில்வே அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ரயில்வே அணி பாபா அபராஜித்தின் பந்துவீச்சில் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன் மூலம் ரயில்வே அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 200 ரன்களைக் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, மனிஷ் ராவ் 55, பிரதாம் சிங் 43 ரன்களை அடித்தனர். தமிழ்நாடு அணி சார்பில் பாபா அபராஜித் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 201 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் முரளி விஜய், அபினவ் முகுந்த் ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். அதன்பின் களமிறங்கிய பாபா அபராஜித், விஜய் சங்கர் இணை, ரயில்வே அணியின் பந்து வீச்சை பதம் பார்த்தது.