இந்தியாவில் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள டி.கே (தினேஷ் கார்த்திக்) தலைமையிலான தமிழ்நாடு அணி விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ்நாடு அணி, திரிபுராவுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, பாபா அபராஜித் 87, அபிநவ் முகுந்த் 84, தினேஷ் கார்த்திக் 40 ரன்கள் அடித்தனர்.
இதைத்தொடர்ந்து, 319 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் பேட்டிங் செய்த திரிபுரா அணி தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், அந்த அணி 34.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தமிழ்நாடு அணி தரப்பில் டி. நடராஜன் மூன்று, முருகன் அஸ்வின், சாய் கிஷோர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியில் தமிழ்நாடு அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், இந்தத் தொடரில் விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. அதுமட்டுமின்றி குரூப் சி புள்ளிப் பட்டியலில் தமிழ்நாடு 24 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
இதையும் படியுங்க:#INDvsRSA: இது எங்க ஏரியா... 203 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா