விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்றது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்றிருந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு, கர்நாடக அணிகள் தகுதி பெற்றன. இந்தத் தொடர் முழுவதிலும் ஒரு தோல்வியை கூட சந்திக்காத தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி கோப்பையைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இதனிடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் மோதின. டாஸ் வென்ற கர்நாடக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் ரன் ஏதுமின்றி மிதுன் வீசிய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து அஸ்வினும் எட்டு ரன்னில் நடையைக் கட்டியதால் தமிழ்நாடு அணி 24 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த அபினவ் முகுந்த் - பாபா அப்ரஜித் இணை பொறுமையாகவும் அதே சமயத்தில் ரன்களையும் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் அபினவ் முகுந்த் 85 ரன்களில் (110 பந்துகள், 9 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த விஜய் சங்கர் வழக்கமான பாணியில் விளையாடத் தொடங்கினார். அப்போது சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பாபா அப்ரஜித் 66 ரன்களில் துரதிருஷ்டவசமாக ரன்-அவுட்டானார். அடுத்த வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து விஜய் சங்கர் 38, வாஷிங்டன் சுந்தர் 2 என அடுத்தடுத்து வெளியேறினர். இறுதிக்கட்டத்தில் சற்று சிறப்பாக ஆடிய ஷாருக்கான் மிதுன் வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளிலும் முகமது 10, முருகன் அஸ்வின் 0 ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றிய மிதுன் ஹாட்ரிக் சாதனைப் படைத்தார்.