2019ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் முதல் தகுதிச் சுற்றுப் போட்டி திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது. இதில், லீக் சுற்றில் தோல்வி அடையாத அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, கவுசிக் காந்தி தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ், தொடக்க வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூவின் அதிரடியால் ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது.
இதைத்தொடர்ந்து, 170 ரன்கள் இலக்குடன் ஆடிய திண்டுக்கல் அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜெகதீசன் நல்ல தொடக்கத்தை தந்தார். 24 பந்துகளில் நான்கு பவுண்ட்ரி, ஒரு சிக்சர் என 37 ரன்கள் எடுத்த நிலையில், முருகன் அஷ்வின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் தங்களது விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் பறிகொடுத்தனர். குறிப்பாக, மூன்றாவது வரிசையில் களமிறங்கிய அஸ்வின் 22 ரன்களில் பெவிலினுக்குத் திரும்பினார்.
இதையடுத்து, அந்த அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டபோது, சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தரப்பில் ஹரிஷ் குமார் கடைசி ஓவரை வீச வந்தார். தனது அபாரமான பந்துவீச்சின்மூலம் முதல் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே வழங்கினார். இதனால், கடைசி மூன்று பந்துகளில் மூன்று சிக்சர்கள் அடித்தால் மட்டுமே வெற்றி என்ற இக்கட்டான நிலைக்கு திண்டுக்கல் அணி தள்ளப்பட்டது.