இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் தொன்மைமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் என்பது மிகவும் பரபரப்பு வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து ஆஸ்திரேலிய வீரர்கள் கிரிக்கெட் அரங்கில் பல சாதனைகளை படைத்திருந்தாலும், இந்த சிறிய ஆஷஸ் கோப்பையை கைப்பற்றுவதையே உயரிய லட்சியமாகக் கொண்டுள்ளனர்.
இங்கி., ஆஸி. ரசிகர்களுக்கு 2ஆவது ட்ரீட்!
அந்த வகையில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் கடந்த முறை ஆஸ்திரேலிய அணி மகுடத்தை சூடியிருந்தது. இந்நிலையில் இந்தாண்டுக்கான ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடர் உலகக்கோப்பைக்கு பின் நடைபெற்ற தொடர் என்பதால் இங்கிலாந்து-ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இரண்டாவது ட்ரீட்டாக அமைந்தது.
அதுமட்டுமல்லாமல் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர், ஃபேன்கிராஃப்ட் ஆகியோர் தங்களின் கம் பேக்கை தந்தனர். இதனால் இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இங்கிலாந்தை வாயடைக்க வைத்த ஸ்டீவ் ஸ்மித்
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக முதல் போட்டியிலேயே பல நிகழ்வுகள் ஏற்பட்டன. அப்போட்டியில் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்தை இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் செய்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒற்றை ஆளாக நின்று இரண்டு இன்னிங்சிலும் சதமடித்த ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது அணியை 251 ரன்கள் வெற்றி பெறவைத்தார். இதைக் கண்ட இங்கிலாந்து ரசிகர்களும் வீரர்களும் வாயடைத்துப் போனார்கள்.
ஆஷஸ் தொடர் முதல் போட்டியில் சாண்ட் பேப்பரைக் காண்பித்து வார்னரை வெறுப்பேற்றி இங்கிலாந்து ரசிகர்கள் அதே போன்று இரண்டாவது போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சரில் ஸ்மித்துக்கு காயம் ஏற்படவே அவர் அடுத்த போட்டியில் விளையாட முடியாமல் போனது. இதனால் மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து தொடரை சமன் செய்தது.
ஸ்டீவ் ஸ்மித்தை தாக்கிய பவுன்சர் பந்து கம்பேக்கில் கம்பேக் கொடுத்த ஸ்டீவ் ஸ்மித்
பின்னர் காயத்திலிருந்து மீண்டு வந்த ஸ்மித், கம்பேக்கில் கம்பேக் கொடுத்தார். அதுவும் ஸ்டைலாக இரட்டை சதம் விளாசி அவர் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டார். இதனால் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை தக்கவைத்தது. சொந்த மண்ணில் தொடரை இழக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆஷஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் செயல்பட்டதால் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது. இதன்மூலம் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஆஷஸ் தொடர் டிராவில் முடிவடைந்தது.
இப்படி ஒவ்வொரு போட்டியும் பல திருப்பங்கள் நிறைந்ததாக இருந்தன. அதனோடு இருநாட்டு வீரர்களும் தங்களின் ஆக்ரோஷங்களை வெளிப்படுத்திவந்தனர். இப்படியிருந்த வீரர்கள் தொடரின் முடிவுக்குப் பின் நேற்று ஓய்வறையில் (டிரஸ்ஸிங் ரூம்) என்ன செய்தார்கள் என்று பார்த்தால் நம் அனைவருக்கும் இவர்களா இப்படி என்று தோன்றும்.
டிரஸ்ஸிங் ரூமில் இவர்களா இப்படி...!
ஏனெனில் மைதானத்தில் எதிரிகளைப் போன்று செயல்பட்ட இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்தும், தங்களின் நண்பர்களுடன் பேசுவதைப்போன்று சகஜமாகப் பேசிக்கொண்டனர். இந்தக் காணொலி இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது. மேலும் மைதானத்தில் பயங்கரமான போட்டியாளர்கள், ஆனால் இரு அணிகளுக்கும் இடையே பல மரியாதைகள் உள்ளது என குறிப்பிட்டிருந்தனர். இந்தக் காணொலி தற்போது வைரலாகிவருகிறது.
மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஏழு இன்னிங்ஸில் 774 ரன்கள் குவித்து மிரட்டிய ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய தரப்பு தொடர் நாயகனாகவும் ஆல்-ரவுண்ட் திறமையின் மூலம் 440 ரன்கள், எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து தரப்பு தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.