கிரிக்கெட் போட்டிகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக, இந்திய அணியில் திறமையான வீரர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்கள் முன்புபோல் தற்போது கிரிக்கெட்டை விரும்பி பார்க்கிறார்களா என்றால் இல்லை என்பதே இங்கு வருத்தத்திற்கு உரிய உண்மையாக இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே அவர்களுக்கு பிடித்த ஆல்டைம் ஃபேவரைட் வீரர்கள் பலர் இப்போது அணியில் இல்லை.
அப்படி, பழைய வீரர்களின் ஆட்டத்தை மிஸ் செய்துவிட்டோமே என்ற ஏக்கத்தில் அவர்கள் இருக்கும்போதெல்லாம், அவர்களை மகிழ்விப்பது #OTDதான். அதாவது, ஆன் திஸ் டே என்று ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியது தான் இந்த #OTD-இன் சிறப்பு. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் இந்த நாளில் நடைபெற்ற கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து பதிவுகளை பார்க்கும்போது பழைய நினைவுகளெல்லாம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்.
அந்தவகையில், இன்று வழக்கம்போல் சமூகவலைதளம் பக்கம் போய் பார்த்தபோது, யுவராஜ் குறித்த பதிவுகள்தான் ஏராளமாக இருந்தன. ஒவ்வொரு போஸ்ட் பார்க்கும்போதும் அந்தப் போட்டியில் யுவராஜ் விளையாடியதெல்லாம் நினைவுக்கு வந்தது.
சரி, திடீரென்று ஏன் யுவராஜின் புகைப்படங்களும், வீடியோக்களும் இன்று வைரலானது என்று பார்த்தால், இந்த நாளில்தான் டி20 கிரிக்கெட்டில் யுவியின் மேஜிக் அரங்கேறியிருப்பது தெரியவந்தது. இங்கிலாந்து வீரர் பிளின்டாஃப் யுவியை சீண்ட, அதற்கு அடுத்த ஓவரில் யுவராஜ் சிங் ஆடிய ஆட்டம் பேய் ஆட்டம். 2007 செப்டம்பர் 19இல் இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை லீக் போட்டி தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் 18ஆவது ஓவர் முடியும்போது யுவியை பிளின்டாஃப் ஸ்லெட்ஜிங் செய்தார்.
அவ்வளவுதான். உக்கிரத்தின் உச்சிக்குச் சென்ற யுவி, அடுத்து பிராட் வீசிய 19ஆவது ஓவரின் முதல் பந்தை மிட் விக்கெட் திசையில் சிக்சர் அடித்தார். அடுத்த பந்தையும் சிக்சர் அடிக்கமாட்டாரா என்ற ஒருவித ஏக்கம் அனைவருக்கும் தோன்றிவிட, அடுத்த பந்தை ஃபைன் லெக் திசையில் சிக்சருக்கு விளாசினார்.
உடனடியாக ஆறு பந்துகளில் ஆறு சிக்சரையும் யுவி அடிப்பாரா என்கிற பேராசை மனதிற்குள் தோன்றாமல் இல்லை. அதே ஆண்டில் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் அடித்தார். ஆனால், அந்தப் போட்டியை நேரலையில் பார்த்ததில்லை.