#INDWvsRSAW: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க மகளிர் அணி தற்போது மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று குஜராத் மாநிலம் வதோதராவில் நடைபெற்றது.
இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை லிசெல் லீ வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப, அதனைத் தொடர்ந்து களமிறங்கிய த்ரிஷா செட்டி, மிக்னான் டு ப்ரீஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
அதன் பின் மற்றொரு தொடக்க வீராங்கனை லாரா வால்வாரட் நிதானமாக விளையாட மறுமுனையில் மரிசேன் காப் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். சிறப்பாக விளையாடிய மரிசேன் காப் அரை சதமடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய மரிசென் 54 ரன்களிலும், லாரா 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த மற்ற வீராங்கனைகள் சோபிக்காததால் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 45.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களை மட்டுமே சேர்த்தது.இந்திய மகளிர் அணி சார்பில் ஜூலன் கோஸ்வாமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன் பின் 165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் பிரியா புனியா, தனது முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.ஆனால், அவரின் ஆட்டம் அனுபவம் வாய்ந்த வீரர்களைப்போல் இருந்தது. சிறப்பாக விளையாடிய பிரியா புனியா தனது அறிமுகப்போட்டியிலேயே அரை சதமடித்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ரோட்ரிக்ஸும் தனது அரை சதத்தினைப் பதிவு செய்தார்.
அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்களுடன் வெளியேறினர். அதன் பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இளம் வீராங்கனை பிரியா புனியா எட்டு பவுண்டரிகளுடன் 75 ரன்களை விளாசி தனது விக்கெட்டை இழந்தார்.
அதன் பின் புனம் ரவுட், மித்தாலி ராஜின் நிதான ஆட்டத்தால் இந்திய அணி 41.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமிழந்து 165 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியினை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்த அறிமுக வீராங்கனை பிரியா புனியா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் - பி. வி. சிந்து