இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. உலகக்கோப்பை தொடருக்குப்பின் இவ்விரு அணிகளும் மோதும் தொடர் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக கடந்த 15ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதலாவது டி20 போட்டி மழையினால் கைவிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா போன்ற பல இளம் வீரர்கள் இந்திய அணியில் களமிறங்குகின்றனர். அதே போன்று தென் ஆப்பிரிக்க அணியிலும் குவிண்டன் டி காக், டேவிட் மில்லர் போன்ற அனுபவ வீரர்களும், பல புதிய வீரர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே இன்றைய போட்டி நிச்சயம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மொஹாலி மைதானத்தில் இந்திய அணி விளையாடியுள்ள இரண்டு சர்வதேச டி20 போட்டிகளிலும், சேஸ் செய்தே வெற்றி பெற்றுள்ளது. இம்முறையும் இந்திய அணியின் கேப்டன் கோலி பவுலிங்கை தேர்வு செய்திருப்பதால்மீண்டும் சேஸ் செய்து இந்தியா வெற்றி பெறுமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.