இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையோன மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தான் முன்னர் அறிவித்ததைப் போன்று டாஸ் போடுவதற்கு ப்ராக்ஸி கேப்டனாக அந்த அணியின் டெம்பா பவுமாவை அழைத்து வந்திருந்தார்.
பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸை போட, பாவுமா டாஸ் கேட்டார். ஆனால் இம்முறையும் இந்திய அணியே டாஸில் வெற்றிபெற்றது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக பத்தாவது முறையாக ஆசிய மண்ணில் டாஸில் தோல்வியுற்றுள்ளது.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் 10 ரன்னிலும், புஜாரா ரன் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 16 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து தற்போது ரோஹித் சர்மா, கேப்டன் கோலி ஆகியோர் நிதானத்துடன் விளையாடி வருகின்றனர்.
இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றிய ரபாடா
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என கைப்பற்றிவிட்டது. இப்போட்டியில் டாஸில் தோற்றாலும் தென் ஆப்பிரிக்க அணி இம்முறை முதல் நாளின் காலையிலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளது. எனவே இன்றைய போட்டியில் அந்த அணி மேலும் எழுச்சி காணுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.