இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா 14 ரன்களில் வெளியேறினார். பின்னர் அகர்வாலுடன் இணைந்த புஜாரா அரை சதமடித்த நிலையில் 58 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் கேப்டன் கோலி, மயாங்க் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். டெஸ்ட்டில் தொடர்ந்து இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்த மயாங்க் அகர்வால் 108 ரன்னில் வெளியேறினார். அதனைத் தொடர்ந்து முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களைச் சேர்த்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் ரபாடா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாவது நாள் ஆட்டத்தில் காலை முதலே இந்திய வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார்.