வங்கதேசம்-ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆறாவது போட்டியில் வங்கதேச அணி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்பின் களமிறங்கிய ஆப்கான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹ்மனுல்லா குர்பஸ், ஹஸ்ரத்துல்லா ஜசாய் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய ஜசாய் 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஆஸ்கர் ஆப்கான் ரன் எடுக்காமலும் சட்ரான் 14 ரன்களுடனும் முகமது நபி 4 ரன்களிலும் நடையைக்கட்டினர். மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையில் ஆப்கான் அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்தது. வங்கதேச அணி சார்பில் அஃபிப் ஹொசைன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
139 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் 4 ரன்களிலும் நஜ்முல் ஹொசைன் 5 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். அதன்பின் களமிறங்கிய அந்த அணியின் ’உலகக்கோப்பை நாயகன்’ கேப்டன் ஷாகிப்-அல்-ஹசன் தனி ஒருவனாக அணியை வழிநடத்திச் சென்றார்.