உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் உதவியால் முதல் இன்னிங்ஸில் 284 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 144 ரன்களை எடுத்தார்.
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 374 ரன்களை அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோரி பர்ன்ஸ் 133 ரன்களை விளாசி அசத்தினார். இதையடுத்து, 90 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் மேத்யூவ் வேட் ஆகியோர் சதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 487 ரன்களை குவித்து டிக்ளர் செய்து, இங்கிலாந்து அணிக்கு 378 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 142, மேத்யூவ் வேட் 110 ரன்கள் அடித்தனர். பெரிய இலக்குடன் கடைசி நாளில் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் பெட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் ரோரி பர்ன்ஸ்(11), ஜேசன்(28), ஜோ ரூட் (28), ஜோ டென்லி (11), ஜாஸ் பட்லர் (1), ஸ்டோக்ஸ் (6), ஜானி பெயர்ஸ்டோவ் (6), மொயின் அலி (4), ஸ்டூவர்ட் பிராட் (0) ஆகியோர் சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும், மறுபக்கம் கிறிஸ் வோக்ஸ் நிலைத்து ஆடினார். இருப்பினும் அவர் 37 ரன்கள் எடுத்திருந்தபோது, பெட் கம்மின்ஸின் ஓவரில் ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி 52.3 ஓவர்களில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி இப்போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லயன் ஆறு, பெட் கம்மின்ஸ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் ஆஸி. வீரர்கள் இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி எட்ஜ்பாஸ்டனில் 18 வருடங்களுக்குப் பிறகு (2001) தற்போதுதான் ஆஷஸில் தனது முதல் வெற்றியை ருசித்துள்ளது. இதுமட்டுமின்றி, உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இதே மைதானத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்ததற்கு ஆஸ்திரேலியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இப்போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்டநாயகன் விருதை வென்றார்.இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 14ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.