இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இதனால் வீரர்களை தனிமைப்படுத்துவதற்காக இன்று (ஜன.27) இருநாட்டு அணி வீரர்களும் சென்னை வருகை தரவுள்ளனர். இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் அஜிங்கியா ரஹானேவிடன் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலின் போது, விராட் கோலி என்றும் தன்னுடைய கேப்டன் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரஹானே, "எங்களிடையே எதுவும் மாறாது. விராட் கோலி எப்போதும் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பார். நான் அவரின் துணைவனாக செயல்படுவேன். அவர் இல்லாதபோது, அணியை வழிநடத்துவது எனது கடமை.
அணியின் துணைக்கேப்டனாக எனது பொறுப்பு அது. ஒரு அணியின் கேப்டனாக நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பது மிக முக்கியமானது. இதுவரை நான் வெற்றி பெற்றேன். எதிர்காலத்திலும், எனது அணிக்கு வெற்றியை தேடி தரும் முடிவுகளை வழங்க முயற்சிப்பேன் என்று நம்புகிறேன்.
நானும் விராட் கோலியும் பரஸ்பரம் நல்ல பிணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளோம். அவர் எனது பேட்டிங்கை ஒவ்வொரு முறையும் பாராட்டியுள்ளார். நாங்கள் இருவரும் இந்தியா மற்றும் வெளிநாடு சுற்றுப்பயணங்களில் சிறந்த முறையில் விளையாடிவுள்ளோம். அதனால் எங்களுக்குள் எந்த பாகுபாடும் இருந்ததில்லை" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு குழந்தை பிறக்க இருந்ததால் கேப்டன் விராட் கோலி விடுப்பில் சென்றார். இதனால், ரஹானே அணியை தலைமை தாங்கி தொடரை கைப்பற்றி அசத்தினார்.
இதையும் படிங்க: ஸ்பின் பவுலிங்கை ஏறி வந்து அடித்தால் பாதி மீசையை எடுத்துக்கொள்கிறேன் - புஜாராவிற்கு அஸ்வின் சவால்!