கொரோனா வைரஸ் தாக்குதலால் பல்வேறு நாடுகளிலும் விளையாட்டுப் போட்டிகளையும் ரத்து செய்துவருகின்றனர். பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடினால் வைரஸ் அதிகமாக பரவும் என்பதால் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவருகின்றன.
இதனிடையே இந்தியாவில் மார்ச் 29ஆம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம், பிசிசிஐ உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அமைப்புகளுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதை தடுப்பது சரியாக இருக்காது. ஆனால் அதில் பார்வையாளர்களையும், ரசிகர்களையும் அனுமதிப்பதை தடுக்கலாம். எனவே ரசிகர்களின்றி அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தவேண்டும்'' என மத்திய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க சிக்கல் எழுந்துள்ள நிலையில், பார்வையாளர்களின்றி ஐபிஎல் தொடர் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொரோனா வைரஸை கிண்டல் செய்த கூடைப்பந்து வீரருக்கு கொரோனா பாதிப்பு - என்.பி.ஏ போட்டிகள் ரத்து!