2020 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் உள்ள வீரர்களை விடுவிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. டெல்லி, ராஜஸ்தான், சென்னை, மும்பை, கொல்கத்தா என அனைத்து அணிகளும் தங்கள் அணி வீரர்களை விடுவித்தனர்.
அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி(கே.கே.ஆர்), ராபின் உத்தப்பா, பியூஸ் சாவ்லா, கிறிஸ் லின் உள்ளிட்ட 13 வீரர்களை விடுவிப்பதாக அறிவித்தது. இவர்களில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ் லின், நீக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் கொல்கத்தா அணியின் அதிரடி ஓபனரான கிறிஸ் லின், கடந்த சீசனில் 13 போட்டிகளில் 405 ரன்களை குவித்தார்.
இதனிடையே தற்போது அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் விளையாடிவரும் கிறிஸ் லின் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொல்கத்தா அணி நிர்வாகம், வீரர்கள், அணி ஊழியர்கள் ஆகியோருடன் நல்ல உறவு உள்ளது. என்னை விடுவித்ததால் எனக்கு கொல்கத்தா அணி மீது பெரிய வருத்தத்தை ஏற்படுத்தவில்லை. என்னை விட பல சிறந்த வீரர்களை பல அணிகள் விடுவித்துள்ளன. அதேபோன்றுதான் கேகேஆர் நிர்வாகமும் என்னை விடுவித்துள்ளது.
ஐபிஎல் ஏலம் விரைவில் நடைபெறுகிறது. எனவே நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் என்னை பயிற்சியாளர்கள் நினைவில் வைத்துக்கொள்வார்கள் என்றார்.
அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரில் டீம் அபுதாபி அணிக்கு எதிரான போட்டியில் மராத்தா அரேபியன்ஸ் அணியில் களமிறங்கிய கிறிஸ் லின் 30 பந்துகளில் 91* ரன்களை விளாசினார். டி10 கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.