கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, உயிரிழந்து வரும் சூழ்நிலையில், பலநாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்தந்த நாடுகளில் நடைபெறவிருந்த விளையாட்டு தொடர்கள் கடந்த இரண்டு மாதமாக ஒத்திவைக்கப்பட்டும், அடுத்த ஆண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் ஜூன் ஒன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தடைக்காலம் முடிவடையும் சூழலில், இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் தொடர்களுக்கான தடையை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்து அறிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதுள்ள சூழ்நிலை காரணமாகவும், இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலின் படியும் இங்கிலாந்தில் நடைபெறவிருந்த ஆடவர் மற்றும் மகளிருக்கான உள்ளூர் கிரிக்கெட் தொடரை மேலும் இரண்டு மாதங்கள் ஒத்திவைக்க ஈசிபி முடிவெடுத்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் வரை இங்கிலாந்தில் எவ்வித உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாது என்பதை தெரிவிக்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட பிரையன்ட்டின் ‘வாழ்த்தரங்கு’ விழா!