இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. இந்நிலையில் புதிய கேப்டனுடன் நியூசிலாந்து அணி முதலாவது டி20 போட்டியில் களமிறங்கியது. அதனைத் தொடர்ந்து முதலாவது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான குசால் மெண்டிஸ், குசால் பெரேரா ஆகியோர் அதிரடி ஆட்டத்தில் இறங்கினர். இதில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குசால் பெரேரா, டிம் சவுதியிடம் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன் பின் களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்லா நிதான ஆட்டத்தை தொடர்ந்தாலும் மறுமுனையில் அதிரடியில் எதிரணியை மிரட்டிய குசால் மெண்டிஸ் அரைசதமடித்து அசத்தினார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 53 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். நியூசிலாந்து அணி சார்பில் கேப்டன் சவுதி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்ரோவின் விக்கெட்டை விழ்த்திய மல்லிங்கா அதன் பின் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் காலின் முன்ரோ சந்தித்த முதல் பந்திலேயே மல்லிங்காவிடம் விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து மார்டின் கப்திலும் 11 ரன்கள் அடித்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து முதல் நிலை ஆட்டகார்கள் சொர்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த நிலையில் 4ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த காலின் டி கிராண்ட்ஹோம், ராஸ் டெய்லர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது.
பந்தை பவுண்டரிக்கு அனுப்பும் ராஸ் டெய்லர் கிராண்ட்ஹோம் 28 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மல்லிங்கா வீசிய பந்தில் கிளீன் போல்ட் ஆனார். அதன் பின் அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராஸ் டெய்லர் 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அரை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதன் பின் கடைசி மூன்று ஓவர்களில் நியூசிலாந்து வெற்றிக்கு 31 ரன்கள் தேவை என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. இறுதியில் நியூசிலாந்து அணி 19.3 ஓவர்களில் 175 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 48 ரன்களை விளாசினார். இலங்கை அணி சார்பில் கேப்டன் லசித் மல்லிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.