நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது கடைசி டி20 போட்டியையும் கைப்பற்றி நியூசிலாந்து மண்ணில் வேறெந்த அணியும் செய்யாத சாதனையைப் படைக்க காத்துக்கொண்டிருக்கிறது.
ஏனெனில் வெறு எந்த அணியும் இதுநாள் வரை நியூசிலாந்துக்குச் சென்று, அந்த அணியை டி20 தொடரில் ஒயிட் வாஷ் செய்தது இல்லை. ஆனால் தற்போது இந்திய அணிக்கு அந்த வாய்ப்பானது கிட்டியுள்ளது. ஏற்கனவே ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய் அணி கைப்பற்றியுள்ளது.
ஒருவேளை இன்றையப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தும்பட்சத்தில் இச்சாதனையைப் படைத்த முதல் அணி என்ற வரலாற்று சாதனையைப் படைக்கும்.
இந்தியா
இந்திய அணியைப் பொறுத்தவரையில் இளம் வீரர்களான கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உச்சகட்ட ஃபார்மில் உள்ளதால், எந்தச் சூழ்நிலையிலும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் திறன் படைத்தவர்கள். மேலும் கடந்த போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கப்பட்டார்.
ஆனால் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்த சாம்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இந்தப் போட்டியில் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி கிடைக்கும் பட்சத்தில் அவர் தனது முழுத்திறனையும் வெளிப்படுத்துவார் என்பதில் ஐயமில்லை.
அதேபோல் பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரையில் தங்களது பணியை சிறப்பாகவே செய்துவருவதால் மீண்டும் இந்தியா கடந்த போட்டியில் விளையாடிய அணியுடனே களமிறங்கும் என ரசிகர் வட்டாரம் தெரிவிக்கிறது.
நியூசிலாந்து
நியூசிலாந்து அணியில் முன்ரோ கடந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை மைதான முழுவதும் சிதறடித்தார். அதேபோல் இந்தப் போட்டியிலும் அவர் தனது அதிரடியை தொடங்குவார் என்பதால் இன்றையப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.